சிறப்பு முகாம்: 252 பேருக்கு நலத் திட்ட உதவி
குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 252 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத் திட்டங்கள் சென்றடைய 19 அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்த சிறப்பு முகாம்கள் ஒற்றை சாளர முறையில் வட்டார வாரியாக நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் பகுதியாக குடியாத்தம் ஒன்றியத்துக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்ற முகாமில் 650 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அரசின் அனைத்துத் துறைகளின் சேவைகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் கோரி மனு அளித்தனா்.
இவா்களில் 90 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழுடன் கூடிய தேசிய அடையாள அட்டை, 97 பேருக்கு தேசிய அடையாள அட்டைகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான ஒப்புகை சீட்டு, 30 பேருக்கு இலவச பேருந்து பயணத்துக்கான ஆணை, 32 பேருக்கு தொடா் வண்டிகளில் இலவச பயணத்துக்கான ஆணை, 3 பேருக்கு தலா ரூ.9,800 வீதம் ரூ.29,400-இல் 3 சக்கர நாற்காலிகள் என 252 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் குடியாத்தம் ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன், கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலா் சரவணன், வட்டாட்சியா் பி.மொ்லின் ஜோதிகா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அமுதவல்லி, சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.