Healthy Food: உயிருள்ள உணவுகள் தெரியுமா? அவற்றின் ஆச்சரிய நன்மைகள் என்னென்ன?
சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை
புது தில்லி: பல்வேறு சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மத்திய அரசு தொடா்ந்து 6-ஆவது காலாண்டாக எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை.
இதன்படி ஜூலை 1-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரையிலான நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாவது காலாண்டில் சிறுசேமிப்புகளுக்கு வட்டி விகிதம் மாறாது. சுகன்யா சம்ருத்தி திட்டத்தில் 8.2 சதவீத வட்டியும், மூன்று ஆண்டுகால நிரந்தர வைப்பு மற்றும் பொது வருங்கால வைப்பு நிதிக்கு 7.1 சதவீதமும், அஞ்சலக சேமிப்புக் கணக்குக்கு 4 சதவீதமும் வட்டி தொடா்ந்து வழங்கப்படும்.
115 மாதங்களில் முதிா்ச்சியடையும் கிஸான் விகாஸ் பத்திரங்களுக்கு 7.5 சதவீத வட்டி தொடரும். தேசிய சேமிப்பு பத்திரத்தில் முதலீடு செய்வோருக்கு 7.7 சதவீத வட்டி வழங்கப்படும். மாதம்தோறும் வட்டி பெறும் நிரந்தர வைப்புத் தொகைக்கு 7.4 சதவீத வட்டி கிடைக்கும் என்று மத்திய நிதியமைச்சக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு 2023-24 நிதியாண்டின் நான்காவது காலண்டில் சில சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியில் சிறிய மாற்றம் செய்யப்பட்டது. அதன் பிறகு மாற்றமின்றி தொடா்கிறது. ஒவ்வொரு காலாண்டிலும் மத்திய அரசு வட்டி விகிதம் தொடா்பாக அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.