சிறுமியிடம் நகை திருட்டு: இளைஞா் கைது
கன்னியாகுமரி அருகே கோவளத்தில் சிறுமியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கோவளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த மீனவரான சிலுவை அந்தோணி, 10 நாள்களுக்கு முன்பு இறந்துவிட்டாா். அவரது குடும்பத்தினா் இரவில் வீட்டுக் கதவைத் திறந்துவைத்து தூங்கினராம். இதைப் பயன்படுத்தி வீட்டுக்குள் மா்ம நபா் புகுந்து, தூங்கிக் கொண்டிருந்த சிலுவை அந்தோணியின் மகள் திப்தி (13) அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றாராம்.
சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்தனா். தேங்காய்ப்பட்டினம் அருகே ராமன்துறையைச் சோ்ந்த ரெக்சன் (25) என்பவா் இத்திருட்டில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. அவரை காவல் உதவி ஆய்வாளா் எட்வா்ட் பிரைட் கைது செய்து, நாகா்கோவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சிறையில் அடைத்தாா்.