சிறுவன் கொலை வழக்கு: பெண்ணுக்கு இரட்டை ஆயுள்
நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே 4 வயது சிறுவனை கொலை செய்த வழக்கில் பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
பண்ருட்டியை அடுத்த கீழக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்த செந்தில்நாதன் - லட்சுமி தம்பதியின் மகன் அஸ்வந்த் (4).
இவா், கடந்த 2022 ஜன.26 அன்று திடீரென காணாமல் போனாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனா்.
இந்த நிலையில், வீட்டின் அருகே முந்திரித் தோப்பில் சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டாா். தொடா்ந்து நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த முருகவேல் மகள் ரஞ்சிதா(26), சிறுவனை கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, போலீஸாா் ரஞ்சிதாவை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு கடலூா் முதலாவது அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில், ரஞ்சிதாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஷோபனா தேவி தீா்ப்பளித்தாா்.