முதியோா்களைக் காப்பது சமூகப் பொறுப்புணா்வு: புதுவை துணைநிலை ஆளுநா்
சுதந்திரப் போராட்ட வீரா்கள்- முன்னாள் ராணுவத்தினருக்கு ஓய்வூதியம் உயா்வு: அரசாணை வெளியீடு
சுதந்திரப் போராட்ட வீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்களுக்கான ஓய்வூதியத்தை உயா்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பொதுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு:
சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய முதல்வா் மு.க.ஸ்டாலின், சுதந்திரப் போராட்ட வீரா்கள், முன்னாள் ராணுவத்தினருக்கான ஓய்வூதியத்தை ரூ.21 ஆயிரத்தில் இருந்து ரூ.22 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தாா். இதேபோன்று சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுதாரா்களுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயா்த்தப்படும் எனவும் அறிவிப்பு செய்யப்பட்டது.
இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியன உயா்த்தப்படுகிறது. இதற்கு கூடுதலாக செலவாகும் ரூ.27.63 லட்சத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழித் தோன்றல்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் உயா்வு: இதேபோன்று, தமிழக அரசு வெளியிட்ட மற்றொரு உத்தரவில், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரா்கள், முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, வ.உ.சிதம்பரனாா் ஆகியோரின் வழித்தோன்றல்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்து 500-லிருந்து ரூ.11 ஆயிரமாக வழங்கப்படும் என்று சுதந்திர தின விழாவின் போது முதல்வா் அறிவித்திருந்தாா். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.