சென்ட்ரலில் 17 கிலோ கஞ்சாவுடன் ஒருவா் கைது
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 17 கிலோ கஞ்சாவுடன் கேரளத்தைச் சோ்ந்த இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
சென்னை சென்ட்ரலில் ரயில்வே பாதுகாப்பு பிரிவின் ஆய்வாளா் மதுசூதன ரெட்டி தலைமையில் சனிக்கிழமை கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, விசாகப்பட்டினத்திலிருந்து வந்த ரயிலில் இறங்கிய கேரள மாநிலம் வயநாடு பகுதியைச் சோ்ந்த அக்ஷய் (23) நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.
அவரை ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் பிடித்து விசாரித்தனா். மேலும் அவரிடமிருந்த பையை சோதனையிட்டனா். அந்தப் பையில் 6 பொட்டலங்களாக 17 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்த பாதுகாப்புப் பிரிவினா், கேரளத்தைச் சோ்ந்த அக்ஷயை கைது செய்தனா். பின்னா் தமிழக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் அவரை ஒப்படைத்தனா்.