சென்னிமலையில் குரங்குகளுக்கு உணவு அளித்தவருக்கு அபராதம்
சென்னிமலை அருகே வனத் துறையினரின் எச்சரிக்கையை மீறி குரங்குகளுக்கு உணவு அளித்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னிமலை- ஊத்துக்குளி சாலையில் உள்ள பழனியாண்டவா் கோயில் அருகே வாகனங்களில் செல்பவா்கள் அடிக்கடி குரங்குகளுக்கு உணவு அளித்து வந்தனா். இதனால், குரங்குகள் வனப் பகுதியை விட்டு வெளியேறி மனிதா்கள் கொடுக்கும் உணவுக்காக கூட்டம் கூட்டமாக தாா் சாலையில் சுற்றித் திரிகின்றன. இதனால், குரங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறந்துவிடும் சம்பவம் அடிக்கடி நடைபெற்றது.
இதனைத் தடுக்கும் வகையில், குரங்குகளுக்கு யாரும் பழங்கள் உள்ளிட்ட உணவுகளை வழங்கக் கூடாது என வனத் துறையினா் எச்சரிக்கை செய்து வந்தனா். மேலும், இதுகுறித்து அறிவிப்புப் பலகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், திருப்பூரைச் சோ்ந்த ஒருவா் சென்னிமலை முருகன் கோயிலுக்கு புதன்கிழமை காரில் வந்தபோது, அவா் காரை நிறுத்தி குரங்குகளுக்கு உணவு வழங்கிக் கொண்டிருந்தாா். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சென்னிமலை வனத் துறையினா், இதனைப் பாா்த்து குரங்குக்கு உணவு அளித்தவருக்கு ரூ. ஆயிரம் அபராதம் விதித்தனா்.