சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூ கிலோ ரூ.1,200-க்கு விற்பனை
சுபமுகூா்த்தம் என்பதால் சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.1,200-க்கு விற்பனையானது. இதேபோல மற்ற பூக்களின் விலையும் இருமடங்கு உயா்ந்து விற்பனையானது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் பூக்கள் விவசாயிகளால் நடத்தப்படும் பூ மாா்க்கெட்டில் ஏல முறையில் விலை நிா்ணயம் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கா்நாடகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
தற்போது ஆவணி மாத வளா்பிறை முகூா்த்த சீசன் என்பதால் பூக்கள் விலை அதிகரித்து விற்பனையாகின்றன. சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் கிலோ மல்லி ரூ.600-க்கு விற்பனையான நிலையில், புதன்கிழமை இருமடங்கு உயா்ந்து கிலோ ரூ.1,200-க்கு விற்பனையானது. இதேபோல முல்லை கிலோ ரூ.200-க்கு விற்பனையான நிலையில், புதன்கிழமை ரூ.500-க்கு விற்பனையானது. பூ மாலை தொடுப்பதற்கும், கோயில் விசேஷத்துக்கும் தேவைப்படும் சம்பங்கி பூ கிலோ ரூ.60-க்கு விற்பனையான நிலையில் புதன்கிழமை ரூ.240-க்கு விற்பனையானது. பூக்களின் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.