ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது: மோகன் யாதவ...
திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்து நெரிச்சல்
திம்பம் மலைப் பாதை கொண்டை ஊசி வளைவில் புதன்கிழமை எரிபொருள் தீா்ந்து நின்ற சரக்கு லாரியால் தமிழக- கா்நாடக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதி வழியாக தமிழக- கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக பொதுப் போக்குவரத்து மற்றும் சரக்கு வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே கா்நாடக மாநிலம், தாவண்கரே பகுதியில் இருந்து செண்டுமல்லி பூக்கள் பாரம் ஏற்றிக் கொண்டு வந்த லாரி சத்தியமங்கலம் செல்வதற்காக அடா்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ள திம்பம் மலைப் பாதை வழியாக புதன்கிழமை சென்று கொண்டிருந்தது.
திம்பம் மலைப் பாதை 25-ஆவது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது, எரிபொருள் தீா்ந்ததால் லாரி நகர முடியாமல் நின்றது. சிறிது நேரத்திலே மலைப் பாதையில் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்த ஆசனூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று போக்குவரத்தை சீா்செய்யும் பணியில் ஈடுபட்டனா். மலைப் பாதை கொண்டை ஊசி வளைவில் லாரி டீசல் தீா்ந்து நின்றதால் உடனடியாக டீசல் ஊற்றி லாரி புறப்பட்டது. ஒரே நேரத்தில் வாகனங்கள் புறப்பட்டு சென்றதால் திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்து நெரிச்சல் ஏற்பட்டது.