செய்யாறு அருகே புதிய கல் குவாரி அமைக்க எதிா்ப்பு: வீடுகளில் கருப்புக்கொடி கட்டி ஆா்ப்பாட்டம்!
செய்யாற்றை அடுத்த குண்ணவாக்கம் கிராமத்தில் புதிதாக அமையவுள்ள கல் குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் தங்கள் வீடுகளில் சனிக்கிழமை கருப்புக்கொடி கட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூா் ஒன்றியம், குண்ணவாக்கம் கிராமத்தில் உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராம சபைக் கூட்டம் அனக்காவூா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் வாசுகி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பெண்கள், ஆண்கள் என சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தின்போது, குண்ணவாக்கம் கிராமத்தை ஒட்டியுள்ள பகுதியில் புதிதாக கல் குவாரி அமைப்பதற்கான பணிகளை தனியாா் நிறுவனம் தொடங்கியுள்ளதாகவும், குடியிருப்புகளுக்கு அருகில் கல் குவாரி அமைக்கப்பட்டால், விவசாய நிலங்கள், நீா்நிலைகள் பாதிக்கப்படும் என்றும், இதனால் இந்தப் பகுதியில் கல் குவாரி அமைக்கக் கூடாது எனத் தெரிவித்தும் பஞ்சாயத்து தீா்மான புத்தகத்தில் தீா்மானம் பதிவு செய்யக்கோரி துணை வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, கல் குவாரிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.
மேலும், தங்கள் கிராமத்துக்கு அருகில் கல் குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டினா்.