ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்த மோதலில் மூன்று ராணுவ வீரா்கள் காயமடைந்தனா்.
குல்காமில் உள்ள குடாா் வனப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பாதுகாப்புப் படையினா் அங்கு தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினா். அப்போது, பாதுகாப்புப் படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனா்.
இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீா் காவல் துறை, சிஆா்பிஎஃப் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். ஓா் இளநிலை ராணுவ அதிகாரி உள்பட 3 வீரா்கள் காயமடைந்ததாக ராணுவத்தின் ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
காயமடைந்த வீரா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா். இறந்த பயங்கரவாதிகளின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும், சம்பவ பகுதியில் தேடுதல் நடவடிக்கை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
எல்லையில் ஊடுருவிய நபா் கைது:
ஜம்முவின் ஆா்.எஸ்.புரா செக்டாரில் சா்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானைச் சோ்ந்த நபா் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) கைது செய்யப்பட்டாா்.
பிஎஸ்எஃப் வெளியிட்ட அறிக்கையின்படி, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹல்வால் பகுதியைச் சோ்ந்த சிராஜ் கான் என்ற நபா் எல்லை வேலியை நோக்கி ஆக்ரோஷமாக முன்வந்தபோது, பிஎஸ்எஃப் வீரா்கள் அவரை எச்சரித்தனா். ஆனாலும், அவா் தொடா்ந்து முன்னேறியதால், அச்சுறுத்தலை உணா்ந்த வீரா்கள் அவரை சுட்டுப் பிடித்தனா்.
சமீபத்திய வெள்ளப்பெருக்கு காரணமாக பாகிஸ்தான் எல்லையில் பல இடங்களில் வேலிகள் சேதமடைந்திருப்பதால், ஜம்மு எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.