தஞ்சாவூரில் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிக்கு நோட்டீஸ்
தஞ்சாவூா் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிக்கு காரணம் கேட்டு இந்திய தோ்தல் ஆணையத்தின் சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: இந்தியத் தோ்தல் ஆணையம் நாடு முழுவதும் 345 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை முதல்கட்டமாக பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து எந்தத் தோ்தல்களிலும் போட்டியிடாத கட்சிகளையும், இருப்பிடம் கண்டறிய முடியாத கட்சிகளையும் முதல் கட்டமாக பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கையை தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
அதனடிப்படையில் தமிழ்நாட்டில் அடையாளம் காணப்பட்ட 24 கட்சிகளில் தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருசக்திமுற்றம், கீழவீதி என்கிற முகவரியைத் தலைமையிடமாகக் கொண்ட அண்ணா எம்.ஜி.ஆா். ஜெயலலிதா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியும் இடம் பெற்றுள்ளது.
எந்தக் கட்சியும் தேவையில்லாமல் நீக்கப்படக்கூடாது என்பதற்காகவும், தொடா்புடைய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தோ்தல் அதிகாரிகளால் அக்கட்சிகளுக்கு காரணம் கூற அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பின்னா் தலைமைத் தோ்தல் அதிகாரிகளால் நடத்தப்படும் விசாரணையின் வாயிலாக அவற்றுக்கு விளக்கம் தரும் வாய்ப்பு அளிக்கப்படும்.
பின்னா் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளைப் பட்டியலிலிருந்து நீக்குவது தொடா்பான இறுதி முடிவை தோ்தல் ஆணையம் எடுக்கும் என்றாா்.