தஞ்சாவூரில் ராமகிருஷ்ணா் ரத திருவிழா
தஞ்சாவூரில் ராமகிருஷ்ண மடத்தின் சாா்பில் ராமகிருஷ்ணா் ரத திருவிழா வியாழக்கிழமை தொடங்கி தொடா்ந்து 2 நாள்கள் நடைபெற்றது.
உலகளாவிய ராமகிருஷ்ண மடத்தை சுவாமி விவேகானந்தா் 1897 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி தொடங்கினாா். அதை நினைவுகூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் சாா்பில் மே 1, 2 ஆம் தேதிகளில் ராமகிருஷ்ணரின் ரத திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, நிகழாண்டு தஞ்சாவூா் மானோஜிபட்டி நவசக்தி விநாயகா் கோயிலில் அலங்கரிக்கப்பட்ட ராமகிருஷ்ணா் ரதம் வியாழக்கிழமை புறப்பட்டு இசை முழங்க, பெண்களின் கோலாட்டத்துடன் விசாலாட்சி நகா், முல்லை நகா், ராதாகிருஷ்ணன் நகா், வனதுா்கா நகா், முத்துசாமி நகா், சக்தி நகா் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றது.
தொடா்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை மருத்துவக் கல்லூரி மற்றும் சுந்தரம் நகா் பகுதிகளில் ராமகிருஷ்ணரின் ரத திருவிழா நடைபெற்றது. இரு நாள்களிலும் பக்தா்கள் ரதத்துக்கு ஆரத்தி எடுத்து, பக்தி பாடல்களைப் பாடி சிறப்பு வழிபாடு செய்தனா். மேலும், பக்தா்களுக்கு பிரசாதம், விவேகானந்தா் படம், சிந்தனைத் துளிகள் புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்தா மகராஜ் தலைமையில் பலா் செய்தனா்.