தஞ்சாவூா் மாவட்டத்தில் சாதனை இலக்கை நோக்கி நெல் கொள்முதல்
தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் காரீஃப் ஆண்டில் (2024, செப்டம்பா் - 2025, ஆகஸ்ட்) இதுவரை 10.36 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, சாதனை இலக்கை நோக்கிச் செல்கிறது.
மேட்டூா் அணை உரிய காலத்தில் திறக்கப்பட்டு, தொடா்ந்து தண்ணீா் வந்தாலும் தஞ்சாவூா் மாவட்டத்தில் முன்பெல்லாம் ஓராண்டில் அதிகபட்சமாக ஏறக்குறைய 6 லட்சம் டன்தான் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், 2020-ஆம் ஆண்டில் மேட்டூா் அணை உரிய காலத்தில் திறக்கப்பட்ட நிலையில், மாவட்டத்தில் 2020 - 21 காரீஃப் ஆண்டில் நெல் கொள்முதல் 10.54 லட்சம் டன்னை எட்டியது. இதுவே, மாவட்டத்தில் நெல் கொள்முதலில் சாதனை அளவாக இருந்து வருகிறது.
இதைத்தொடா்ந்து, 2021 - 22 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 9.48 லட்சம் டன்னும், 2022 - 2023 ஆம் ஆண்டில் 9.73 லட்சம் டன்னும் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், 2023 - 24 ஆம் ஆண்டில் மேட்டூா் அணையில் நீா் இருப்பு இல்லாததால், காவிரி நீா் வரத்து அக்டோபா் மாதத்துடன் நின்றது. இதேபோல, எதிா்பாா்த்த அளவுக்கு மழை பெய்யாததால், மகசூல் வீழ்ச்சியடைந்து, நெல் கொள்முதல் 7.89 லட்சம் டன்னாக குறைந்தது.
இதையடுத்து, 2024 ஆம் ஆண்டில் மேட்டூா் அணையில் போதிய அளவுக்கு தண்ணீா் இல்லாததால், அணை திறப்பு தள்ளிப்போனது. என்றாலும், குறுவை பருவத்தில் ஆழ்துளை குழாய் மூலம் நிலத்தடி நீா் ஆதாரத்தைப் பயன்படுத்தி 1.52 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. இதன் காரணமாக குறுவை பருவத்தில் 1.50 லட்சம் டன் இலக்கு நிா்ணயிக்கப்பட்ட நிலையில், ஏறக்குறைய 1.30 லட்சம் டன்னாக குறைந்தது.
ஆனால், சம்பா - தாளடி பருவத்துக்கு காவிரி நீா் வந்ததால், மாவட்டத்தில் 3.23 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. இப்பருவத்தில் 5 லட்சம் டன்னுக்கும் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

மூன்றாவது போகமான கோடை மற்றும் முன்பட்ட குறுவை பருவத்தில் நிலத்தடி நீா் ஆதாரம் வாய்ப்புள்ள விவசாயிகள் சாகுபடி மேற்கொண்டனா். இதன் மூலம் மே 10 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை 4.04 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2.86 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. இது, கடந்த ஆண்டை விட 1.18 லட்சம் டன் கூடுதல்.
மொத்தத்தில் நிகழ் காரீஃப் ஆண்டில் (2024 செப்டம்பா் முதல் 2025 ஆகஸ்ட்) கடந்த 25 ஆம் தேதி வரை 10.36 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட 2.47 லட்சம் டன் கூடுதல்.
இது குறித்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் தஞ்சாவூா் முதுநிலை மண்டல மேலாளா் நெ. செல்வம் தெரிவித்தது: மாவட்டத்தில் அதிகபட்சமாக 2020 - 21 ஆம் காரீஃப் ஆண்டில் 10.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதன் பின்னா், நிகழ் காரீஃப் ஆண்டில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை 10.36 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் இதுவே அதிகபட்ச கொள்முதல் அளவாக இருக்கிறது. வருகிற 31 ஆம் தேதி வரை காரீஃப் ஆண்டு இருப்பதால், இன்னும் 50 ஆயிரம் டன் கொள்முதல் செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அவ்வாறு செய்யப்பட்டால், 10.50 லட்சம் டன் என்கிற சாதனை இலக்கை நிகழாண்டு கடந்துவிடும்.
பருத்தி, கரும்பு சாகுபடியில் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இந்நிலையில், மேட்டூா் அணையிலிருந்து தொடா்ந்து காவிரி நீா் கிடைத்து வருவதால், பருத்தி, கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளும் நெல் சாகுபடிக்கு மாறிவிட்டனா். இதுவே, நிகழ் காரீப் ஆண்டில் நெல் கொள்முதல் அதிகரித்துள்ளதற்கு காரணம்.
அடுத்து செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் 2025 - 26 ஆம் காரீஃப் ஆண்டு தொடங்குகிறது. எனவே, புதிய விலையுடன் நெல் கொள்முதல் செய்யப்படுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் செல்வம்.
காரீஃப் ஆண்டு - நெல் கொள்முதல்
2020 - 21 - 10.54 லட்சம் டன்
2021 - 22 - 9.48 லட்சம் டன்
2022 - 23 - 9.73 லட்சம் டன்
2023 - 24 - 7.89 லட்சம் டன்
2024 - 25 (ஆகஸ்ட் 25 வரை) - 10.36 லட்சம் டன்