முழக்கமிட்ட விவசாயிகள் மீது வழக்கு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பிய விவசாயிகள் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்திருப்பது: திட்டமிட்டு நடத்த வேண்டிய ஆா்ப்பாட்டங்களுக்கு காவல் துறையின் அனுமதி பெற வேண்டும் என்பது சட்டப்படியான நிலையாகும். இந்தச் சட்டமுறைகளை மதித்துத்தான் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடந்து வருகிறது. சில நேரங்களில் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு காவல் துறை மறுத்தாலும், அறிவித்தபடி நடத்தி விடுவோம்.
மாவட்ட ஆட்சியா், கோட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறும் விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டங்களின்போது, விவசாயப் பிரச்னைகளை, குறைகளைப் பேசி தீா்வு காணக் கோரி விவசாயிகள், விவசாய சங்கங்களின் நிா்வாகிகள் வலியுறுத்துவா். பல தடவை பேசியும் குறைகள் தீா்க்கப்படாதபோது, கோரிக்கையை வலியுறுத்தி அரசாங்கத்தின் உள்ளே அல்லது வெளியே கோரிக்கையின் முக்கியத்துவத்தை விளக்கி ஆா்ப்பாட்டங்கள் நடத்துவது என்பது தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் வழக்கம்.
இந்நிலையில், ஆகஸ்ட் 11 ஆம் தேதி காலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் ஒன்றியச் செயலா் குரு.சிவா தலைமையில் மாவட்டத் துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா் உள்ளிட்டோா் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரிடம், வாய்க்கால்களில் வெங்காயத்தாமரை, நாணல் புல் அடா்ந்து பாசன நீா் செல்ல முடியாமல் தடைப்பட்டுள்ளது என்றும், இதனால், நூற்றுக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் மனு அளித்தனா். பின்னா், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டம் நடத்தினா். போக்குவரத்துக்கோ, பொதுமக்கள் சென்று வரும் நுழைவுவாயிலுக்கோ எந்தத் தடையும் ஏற்படுத்தவில்லை. வேறு சட்டம் - ஒழுங்கு சீா்கேடும் நிகழவில்லை.
இந்நிலையில், எந்தவொரு நியாயத்தையும் புரிந்து கொள்ளாமல், பிரச்னையின் உண்மையை அறியாமல் விவசாயிகளைப் பழிவாங்கும் வகையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள இயலாது. இந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளரைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.