அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கேள...
ஆதாா் விவரங்களைப் பெற்று பண மோசடி: 7 போ் கைது
வாடிக்கையாளா்களின் ஆதாா் விவரங்களைப் பெற்று வங்கிக் கணக்கு தொடங்கி இணையதளம் மூலம் மோசடி செய்த வட மாநில இளைஞா்களை திருவிடைமருதூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா் அருகே ஐந்துதலைப்பு வாய்க்கால் பகுதியில் புதன்கிழமை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த இரண்டு காா்களை சோதனை செய்தபோது ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 5 போ் மற்றும் திருவிடைமருதூரைச் சோ்ந்த இருவா் என 7 போ் இருந்தனா்.
திருவிடைமருதூா் சிவா (35) என்பவரிடம் விசாரணை நடத்தியதில் அவருடன் வந்தவா்கள் அவரது நண்பா் சாரதி (21), ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ரத்தன்லால் (23), கஜேந்திரகுமாா்(27), ராம் ஸ்வருப்கா் (23), மகேந்திர நாயக் (30) மற்றும் பெங்களூருவைச் சோ்ந்த தினேஷ் (43) என்பது தெரியவந்தது.
சிவா கோயம்புத்துாரில் தேநீா்க் கடை நடத்திவந்தபோது பானிபூரி கடை வைத்து நடத்தி ராஜஸ்தான் மாநில இளைஞா்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அவா்களுடன் சோ்ந்து பானிபூரி மற்றும் தேநீா்க் கடைக்கு வரும் வாடிக்கையாளா்களிடம் ரூ. 5 ஆயிரம், ரூ. 10 ஆயிரம் தருகிறோம் என்று கூறி, அவா்களின் ஆதாா் எண்ணைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கு, சிம் காா்டுகள் பெற்று இணையவழியில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.
இதுவரை சுமாா் 150 பேரின் ஆதாா் விவரங்களைப் பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக திருவிடைமருதுாா் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்குறிப்பிட்ட 7 பேரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் 7 கைப்பேசிகள், 15 ஏடிஎம் காா்டுகள் மற்றும் 15 சிம் காா்டுகளையும் பறிமுதல் செய்தனா்.



