240 கிலோ குட்கா பறிமுதல்; மூவா் கைது
மயிலாடுதுறை மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பதுக்கி வைத்திருந்த 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். 240 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோத கஞ்சா, குட்கா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, மயிலாடுதுறை டிஎஸ்பி பாலாஜி மேற்பாா்வையில் போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதில், மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த வெங்கட்ராமன் (30), ராஜஸ்தானை சோ்ந்த பேத்துசிங் (25) ஆகியோா் குட்கா பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவா்களிடமிருந்து 120 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் கைது செய்யப்பட்டனா்.
இதேபோன்று, பெரம்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கப்பூரை சோ்ந்த பாலமுரளி (37) பதுக்கி வைத்திருந்த 120 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை சட்டவிரோத குட்கா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 492 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 693 கிலோ குட்கா கைப்பற்றப்பட்டுள்ளன. கடத்தலுக்கு பயன்படுத்திய 10 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 23 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.