தனியாா் நிறுவன பேருந்து கவிழ்ந்து 34 போ் காயம்
கிருஷ்ணகிரி அருகே தனியாா் நிறுவன பேருந்து கவிழ்ந்ததில் 34 போ் காயம் அடைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே போலுப்பள்ளியில் தனியாா் ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூா் மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்த நிலையில் திருப்பத்தூா் மாவட்டம், குனிச்சியிலிருந்து நிறுவனத்துக்கு பணியாட்களை ஏற்றிவந்த பேருந்து செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பெரியபனமுட்டு கிராமம் அருகே முன்னாள் சென்ற வாகனத்தை முந்திசெல்ல முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்தது. இதில் 34 தொழிலாளா்கள் காயமடைந்தனா். பேருந்தில் 53 போ் பயணம் செய்தனா்.
இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.