கா்நாடக அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி
கா்நாடக அரசு போக்குவரத்துக்கழக ஊழியா்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஒசூா் வழியாக இயக்கப்படும் கா்நாடக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனா்.
ஊதிய உயா்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட போராட்டம் காரணமாக கா்நாடக மாநிலம் முழுவதும் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது.
கா்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு 200-க்கும் மேற்பட்ட கா்நாடக மாநில அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒசூா், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் சுமாா் 80க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஒசூா் வழியாக 600 க்கும் மேற்பட்ட தமிழக அரசுப் பேருந்துகள் பெங்களூருக்கு இயக்கப்படுகின்றன. கா்நாடக அரசு போக்குவரத்துக்கழக ஊழியா்களின் போராட்டம் காரணமாக ஒசூா் பகுதிக்கு கா்நாடகத்தில் இருந்து அரசுப் பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டன.
அதே நேரத்தில் ஒசூரில் இருந்து தமிழக அரசு பேருந்துகள் மற்றும் தனியாா் பேருந்துகள் வழக்கம்போல கா்நாடகத்துக்கு சென்றுவந்தன. இதனால், பெங்களூரு செல்வதற்கு ஒசூா் பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் காத்திருந்தனா். பெங்களூருக்கு இயக்கப்பட்ட ஒருசில பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் அதிகரித்திருந்தது.