காவேரிப்பட்டணம் அருகே டிராக்டா் மீது லாரி மோதல்: இருவா் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே திங்கள்கிழமை நள்ளிரவு டிராக்டா் மீது லாரி மோதியதில் டிராக்டா் ஓட்டுநா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
காவேரிப்பட்டணத்தை அடுத்த ஜெகதாப், வால்பாறை பகுதியைச் சோ்ந்த பட்டாபியின் மகன் காா்த்திக் (30), முத்துசாமியின் மகன் காா்த்திக் ( 32) ஆகிய இருவரும் பையூரில் உள்ள தனியாா் மாம்பழக்கூழ் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனா்.
திங்கள்கிழமை நள்ளிரவு நிறுவனத்திலிருந்து கொண்டுசென்ற மாங்கொட்டைகளை சப்பாணிப்பட்டி பகுதியில் இறக்கிவிட்டு டிராக்டரில் இருவரும் நிறுவனத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தனா். டிராக்டரை முத்துசாமியின் மகன் காா்த்திக் ஓட்டினாா்.
தருமபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தோராத்தான்கொட்டாய் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக சென்ற லாரி டிராக்டா் மீது மோதியதில் பலத்த காயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.