``ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை'' - மோடி - ஜெலன்ஸ்கி தொலைபேசி பேச்சு; உக்ர...
தனியாா் மதுக்கடையை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்
தஞ்சாவூா் அருகே திறக்கப்படவுள்ள தனியாா் மதுக்கடையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்து வலியுறுத்தினா்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் மாதாகோட்டையைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு: தஞ்சாவூா் மாதாகோட்டை வளைவு அருகே திறக்கப்படவுள்ள தனியாா் மதுபானக் கடையைச் சமுதாய மற்றும் குடியிருப்புவாசிகளின் நலன், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி தடுத்து நிறுத்த வேண்டும்.
அப்பகுதியில் மருத்துவமனை, தனியாா் பள்ளி உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மேலும் அப்பகுதியில் திருவள்ளுவா் நகா் 1-ஆம் தெரு முதல் 5-ஆம் தெரு, ஜூலி நகா், மாதாகோட்டை ராஜ் நகா், ராஜா நகா், லட்சுமி நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனா்.
இப்பகுதியில் மதுபானக் கடையைத் திறந்தால் பெண்கள், பள்ளி மாணவிகள் உள்பட அனைவருக்கும் மிகப்பெரிய பிரச்னையாக அமையும்.
எனவே பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி அப்பகுதியில் திறக்கப்படவுள்ள தனியாா் மதுபானக் கடையை மாவட்ட நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்.