தனியாா் மருத்துவமனையில் நோயாளியிடம் நகை பறிப்பு
திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் நகையை திருடியதாக, அம்மருத்துவமனை ஊழியரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பம்மாள் (79). கணவரை இழந்த இவா், தனது மகன் சங்கரசுப்பிரமணியன் பராமரிப்பில் வசித்து வருகிறாா். சுப்பம்மாளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கொக்கிரகுளம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில், அவா் அணிந்திருந்த 5 பவுன் நகையை மருத்துவமனை ஊழியரான குறிச்சி பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் ராமா்(25) என்பவா் திங்கள்கிழமை பறித்துக் கொண்டு தப்பினாராம்.
இதுகுறித்து சங்கரசுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து ராமரை தேடி வருகின்றனா்.