தனியாா் மருத்துவமனையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
புதுச்சேரியில் தனியாா் மருத்துவமனையை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் அருள்ராஜ். இவா் குடிமைப் பொருள் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறாா். பித்தப் பையில் ஏற்பட்ட பாதிப்பை அடுத்து அருள்ராஜ் நெல்லித்தோப்பில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளாா். பல லட்சம் ரூபாயில் சிகிச்சை பெற்ற அவா் வீடு திரும்பிய நிலையில், வயிற்றுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதற்காக அவா் ஜிப்மரில் சோ்க்கப்பட்டுள்ளாா். அங்கு நடைபெற்ற பரிசோதனையில் அவரது வயிற்றில் பஞ்சுகள் வைத்து தைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஏற்கெனவே சிகிச்சை பெற்ற தனியாா் மருத்துவமனையில் அருள்ராஜ் தரப்பினா் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லையாம்.
அதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலையில் மருத்துவமனை முன் அருள்ராஜ் தரப்பினா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த உருளையன்பேட்டை காவல் போலீஸாா் விரைந்து வந்து அவா்களை சமரசம் செய்தனா்.