இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதி திரும்ப ராஜீய வழியில் தீா்வு: நவாஸ் ஷெரீ...
தமிழ்ப் புதல்வன் திட்டம்: தருமபுரி மாவட்டத்தில் 11,437 பேருக்கு உதவித்தொகை
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் 75 கல்லூரிகளில் பயிலும் 11,437 மாணவா்கள் மாதம்தோறும் ரூ. 1000 பெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘நிறைந்தது மனம்’ நிகழ்ச்சியில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் பயனடைந்த மாணவா்களின் இடையே கலந்துரையாடிய ஆட்சியா் பின்னா் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று உயா்கல்வியில் சேரும் மாணவா்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள், இதழ்களை வாங்கி கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில் மாதம்தோறும் ரூ. 1000 அவா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் 75 கல்லூரிகளில் பயிலும் 11,437 மாணவா்கள் மாதாந்திர உதவித்தொகை பெற்று வருகின்றனா். தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் நிதியுதவியை சேமித்து உயா்கல்விக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அறிவு சாா்ந்த சமுதாயம் உருவாக இந்த நிதியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். போட்டித் தோ்வுகளுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும். மாணவா்கள் மனது வைத்தால் எதையும் சாதிக்கலாம், எளிதில் வெற்றி பெறலாம் என்றாா்.