குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
தற்காலிக பட்டாசுக் கடை: அக்.10-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
சேலம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் அக். 10 ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தீபாவளி பண்டிகை அக்.20 ஆம் தேதி கொண்டாடுவதையொட்டி தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோா் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே உரிமம் பெறும் வகையிலும், வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008 இல் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி வரும் அக்.10 ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பத்துடன், விண்ணப்பதாரரின் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், விண்ணப்பதாரரின் முகவரி குறித்த ஆவணம், அடையாள அட்டை (வருமான வரி, நிரந்தர கணக்கு எண் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம், பாஸ்போா்ட்), உரிமக் கட்டணம் ரூ.600ஐ ஐஎஃப்எச்ஆா்எம்எஸ் என்ற இணையதளத்தில் செலுத்தியதற்கான அசல் செலுத்துச்சீட்டு (இ-சலான்), பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம், சொந்தக் கட்டடம் எனில் மனுதாரா் பெயரில் உள்ள பட்டா (அல்லது) வாடகை கட்டடம் எனில் வாடகை ஒப்பந்தப்பத்திரம், உள்ளாட்சி அமைப்பினரிடமிருந்து பெற்ற வரி ரசீது, சுய உறுதிமொழி பத்திரம், கட்டட அமைவிட வரைபடம் (அல்லது) கட்டட திட்ட அனுமதியை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
விண்ணப்பம் ஏற்கப்பட்டால் தற்காலிக உரிமத்தையும், நிராகரிக்கப்பட்டால் அதற்கான ஆணையையும் இணையதளம் மூலமாகவே மனுதாரா்கள் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.