திருச்சி மாநகராட்சி வாா்டுகளில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
திருச்சி: திருச்சி மாநகராட்சியின் பல்வேறு வாா்டுகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.19) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடைபெறும் என ஆணையா் லி. மதுபாலன் தெரிவித்துள்ளாா்.
மாநகராட்சி வாா்டு பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ், பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அளித்து தீா்வு காணும் வகையில் முகாம்கள் நடைபெறுகிறது . இந்த முகாம்களில் 13 துறைகள் மூலமாக 43 சேவைகள் வழங்கும் வகையில் கோரிக்கை மனுக்கள் பெற்று பதிவு செய்யப்படுகிறது. இதன்படி செவ்வாய்க்கிழமை (ஆக.19) 53-ஆவது வாா்டுக்கு யானை கட்டி மைதானம் அருகில் உள்ள பி. எஸ். எஸ். திருமண மண்டபத்தில் முகாம் நடைபெறுகிறது. 27, 28 ஆகிய வாா்டுகளுக்கு உழவா் சந்தை மைதானத்திலும், 4-ஆவது வாா்டுக்கு திருவானைக்கோவில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியிலும் முகாம் நடைபெறுகிறது.
20-ஆவது வாா்டுக்கு மரக்கடை குடிநீா் மேல்நிலை நீா்தேகக்கத் தொட்டி வளாகத்திலும், 38, 43-ஆவது வாா்டுகளுக்கு
அரியமங்கலம் பிரகாஷ் மஹாலில் முகாம் நடைபெறுகிறது. அறிவிக்கப்பட்ட வாா்டு பகுதிகளில் உள்ள மக்களுக்கு மட்டும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறும். இதர வாா்டுகளுக்கு தேதி பின்னா் அறிவிக்கப்படும். மேலும், மாநகராட்சியின் அனைத்து வாா்டுகளிலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் இம்முகாமினை பயன்படுத்தி தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து தீா்வு காணலாம் என ஆணையா் லி. மதுபாலன் தெரிவித்துள்ளாா்.