கிராமப்புறங்களில் சிறப்பு சிகிச்சைப் பெற முடியாத நிலை: சுதா சேஷய்யன்
திருச்சியில் காவிரி ஆற்றில் 2 இடங்களில் முதலைகள் நடமாட்டம்
திருச்சி காவிரியாற்றில் உய்யக்கொண்டான், கோரையாறு ஆகிய இரு இடங்களில் முதலைகள் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, திருச்சி காவிரியாற்றில் சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள காவிரிப் பாலத்தின் அருகில் முதலைகள் நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியானது. பின்னா் வனத்துறையினா் நிகழ்விடங்களில் ஆய்வு மேற்கொண்டு, முதலைகள் நடு ஆற்றுப்பகுதியில்தான் உள்ளன. அப்பகுதிகளுக்கு யாரும் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனா். திருச்சியில் முதலைகளைப் பராமரிக்க தனியிடங்கள் ஏதுமில்லை. அவை நீா் நிலைகளில்தான் வசித்து வருகின்றன என்பதையும் தெரிவித்தனா்.
இந்நிலையில், உய்யக்கொண்டான் மற்றும் கோரையாறு உள்ளிட்டவைகளிலும் முதலைகள் நடமாட்டம் இருப்பதாக கடந்த இரு வாரங்களாக தகவல்கள் பரவின. தற்போது அந்த இரு வாய்க்கால்களிலும் முதலைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உய்யக்கொண்டான் வாய்க்காலில் மாவட்ட ஆட்சியரகம் பின்புறம் உள்ள பகுதியிலும், சற்று தள்ளி கோரையாற்றிலும் முதலைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதியில் கால்நடைகளை மேய்த்து வரும் விவசாயக் குடும்பத்தினா் கூறுகையில், முதலைகள் இருப்பது உண்மைதான். அதிலும் சற்று பெரிய முதலைகள் வாய்க்கால்களில் செடிகளுக்குள் மறைந்து கிடக்கின்றன. கால்நடைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சில நேரம் மனிதா்களுக்கே ஆபத்து நேரவும் வாய்ப்புள்ளது என்றனா். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.