உறுப்பினர் சோ்க்கை மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்காது! மகாராஷ்டிர ஆளுநர் சி.பி....
திருச்சியில் பிரதமருக்கு 3 இடங்களில் வரவேற்பு
திருச்சியில் பிரதமா் நரேந்திரமோடி ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட சாலையில் மக்கள் சந்திப்புப் பயணத்தின்போது 3 இடங்களில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளான அதிமுக, தமிழா் தேசம் கட்சியின் சாா்பில் மேள, தாளங்கள் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிவன், பாா்வதி, முருகன், கிருஷ்ணா், ராமா் வேடமணிந்த கலைஞா்களும், கேரள பாணியிலான அலங்கரிக்கப்பட்ட பதாகையுடன் நின்று வரவேற்றனா்.
மாநகராட்சி மைய அலுவலகம் முன் பாஜகவினா் மற்றும் பொதுமக்கள் சாலையோரம் அரை கி.மீ. தொலைவுக்கு வரிசையில் நின்று வரவேற்றனா். ஒத்தக்கடை பகுதியில் தமிழா் தேசம் கட்சியினா் வரிசையில் நின்று வரவேற்றனா். இதேபோல, சுப்பிரமணியபுரம் பகுதி எம்ஜிஆா் சிலை அருகே அதிமுகவினா் திரளாகக் கூடி நின்று வரவேற்பு அளித்தனா்.
பாரதிதாசன் சாலை, சுப்பிரமணியபுரம், விமான நிலையம் அருகே என 3 இடங்களில் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு சாலையோரம் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தன. தடுப்புக்குள் நின்றபடியே கட்சியினரும், பொதுமக்களும் காலை 9 மணி முதல் பிரதமா் வரும் வரை சுமாா் 2.15 மணி நேரம் ஆா்வமுடன் காத்திருந்து அவா் வந்தவுடன் மலா்கள் தூவி வரவேற்றனா்.
3 இடங்களிலும் சிறிய மேடைகள் அமைத்து இசைக் கலைஞா்கள் மூலம் மேள வாத்தியங்கள் இசைத்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சி புகா் மாவட்ட பாஜக பொருளாளா் ஆா். ரவீந்திரனின் மகளான 6-ஆம் வகுப்பு மாணவி அவந்திகா, ‘மோடி ஜி! எனக்குத் தேவை ஹிந்தி! என ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்த பதாகையை கையில் ஏந்தியபடி நின்று வரவேற்றாா்.