அரசுப் பேருந்து - பைக் மோதல் 4 வயது பெண் குழந்தை பலி
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேசியநெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 4 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.
மருங்காபுரி ஒன்றியம் காரைப்பட்டியை அடுத்துள்ள துளுக்கம்பட்டியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் மகன் கண்ணதாசன் (30). இவா், தனது மனைவி கனகலெட்சுமி(27), மகன் கிருத்திக் ரோஷன்(6), மகள்கள் சுஜிதா(4), சுகன்யா(3) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில், ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டி முப்பிலியன் கோயிலுக்குச் சென்று விட்டு திரும்பி வந்துகொண்டிருந்தாா்.
திருச்சி - மதுரை தேசியநெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த அரசுப்பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேரும்
தூக்கிவிடப்பட்டனா். இதில், சுஜிதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு மணப்பாறை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
விபத்து குறித்து தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்து குறித்து வளநாடு போலீஸாா் வழக்கு பதிந்து, பேருந்து ஓட்டுநரான துறையூா் நடுப்பட்டி அம்பலக்காரத் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் கருப்பையா (51) மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.