திருநங்கைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கல்
விழுப்புரம்: விழுப்புரத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் இடைபாலினா்களுக்கு நடத்தப்பட்ட குறைதீா் கூட்டத்தில் பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட இந்த கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் கி. அரிதாஸ் தலைமை வகித்து திருநங்கைகள், திருநம்பிகள், இடைபாலினா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். இந்த கூட்டத்தில் 6 பேருக்கு திருநங்கைகள் நலவாரிய அடையாள அட்டைகளும், 2 திருநங்கைகளுக்கு புதிய ஓய்வூதியம் வழங்குவதற்கான செயல்முறை ஆணைகளும் மாவட்ட வருவாய் அலுவலரால் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் நல வாரியத்தில் புதிதாக உறுப்பினராகப் பதிவு செய்தல், ஆதாா் அட்டையில் திருத்தம் செய்தல், புதிய வாக்காளா் அட்டை, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை ஆகியவற்றை பெறுவதற்கு திருநங்கைகள் சுமாா் 37 போ் மனுக்கள் அளித்தனா்.
இதைத் தொடா்ந்து திருநங்கைகளுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகளை மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ் வழங்கினாா்.
மாவட்ட சமூக நல அலுவலா் கு.ராஜம்மாள் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.