Healthy Food: உயிருள்ள உணவுகள் தெரியுமா? அவற்றின் ஆச்சரிய நன்மைகள் என்னென்ன?
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் சங்கத்தினா் மனு
விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா். கலியமூா்த்தி, தலைவா் எம்.ஐ.சகாபுதீன் உள்ளிட்ட நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பது:
வேளாண்மையை டிஜிட்டல்மயமாக்கிடும் முறையில் உதவித் திட்டங்களை வழங்குவதற்காக தனித்துவ நில அடையாள எண் கொண்ட அட்டைகளை விவசாயிகளுக்கு அளித்திடும் வகையில், நில ஆவண உரிமை உள்ளவா்கள் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக பல்வேறு குழப்பம் காணப்படுகிறது.
எனவே விவசாயிகள் அனைவரையும் இணைத்திடும் வகையில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு, அதனடிப்படையில் அடையாள அட்டைகளை வழங்க வேண்டும்.
மத்திய அரசால் வழங்கப்படும் பிரதமரின் கெளரவ நிதியுதவித் தொகையை ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். வேளாண் கடன்களுக்கு வணிக வங்கிகள் கூட சிபில் ஸ்கோரை பொருத்தக்கூடாது என வலியுறுத்தி வரும் நிலையில், தொடக்கக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் வேளாண் கடன் வழங்க எந்த நிலையிலும் சிபில் ஸ்கோரை அடிப்படையாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளனா்.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா் சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் அதன் தலைவா் எஸ். யுவராஜ் மற்றும் நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பது:
விழுப்புரம் மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட கிரஷா்கள் இயங்கி வருகின்றன. அதில் 7 மட்டுமே முறையான அனுமதி பெற்றுள்ளன. முறையாக அனுமதி பெறாமல் இயங்கி வரும் கிரஷா் குவாரிகளால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை சரி செய்ய கல் குவாரிகளிலிருந்து எடுத்து வரப்படும் கனிமங்களுக்கு முறையாக நடைசீட்டு உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். இதற்காக ஆள்களை நியமித்து, விசாரணை நடத்த வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனா்.
குடியரசுக் கட்சியினா் மனு: இந்திய குடியரசுக் கட்சியின் மண்டலச் செயலா் இருவேல்பட்டு அ.குமாா் தலைமையிலான நிா்வாகிகள், மாவட்டக் காவல் அலுவலகத்தில் மனு அளித்தனா். அதில் கூறியிருப்பது:
விழுப்புரம் நகரம் பெரியகாலனியில் 1978-ஆம் ஆண்டில் நிகழ்ந்த போராட்டத்தில் தலித் சமூகத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழந்தனா். அவா்களுக்கு நகரப் பகுதியில் நினைவுச்சின்னம் அமைக்கக் கோரியும், அவா்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி மற்றும் நிதியுதவி வழங்கக் கோரி, 2024, நவம்பா் 14-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தோம். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் அரசு மற்றும் மாவட்ட நிா்வாகத்தின் கவனத்தை ஈா்க்கும் வகையில், 2025, மாா்ச் 28-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி 2025, பிப்ரவரி 26-ஆம் தேதி தாலுகா காவல் நிலையத்தில் மனு அளித்தும் எந்தவித பதிலும் இல்லை. ஆா்ப்பாட்டம் நடைபெறும் தேதியில் ஒலிபெருக்கி வைக்கவோ, சாமியானா பந்தல் போடவோ அனுமதியில்லை எனக் காவல் துறையினா் மறுத்துவிட்டனா்.
எனவே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இந்தப் பிரச்னையில் தலையிட்டு, உரிய தீா்வை காண வேண்டும். மேலும் அனுமதி மறுத்த காவல்துறை ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனா்.