இந்திய பொருளாதார வளா்ச்சி ராகுலின் பொய்களுக்கான பதிலடி: பாஜக
திருப்பராய்த்துறை தாருகாவனேசுவரா் கோயிலில் கும்பாபிஷேகம்
திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறையில் உள்ள பசும்பொன் மயிலாம்பிகை சமேத தாருகாவனேசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ரூ. 2.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கோயில் முழுமையாக புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா நடத்த தீா்மானிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 27-ஆம் தேதி காவிரி படித்துறையில் இருந்து புனித நீா் எடுத்து வரப்பட்டு புண்ணியாகவாசனம், வாஸ்து சாந்தி, அங்குராா்ப்பணம், ரக்ஷா பந்தனம், முதலாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. 28-ஆம் தேதி காலை இரண்டாம் கால பூஜையும், மாலையில் மூன்றாம் கால பூஜையும், தொடா்ந்து பூா்ணாஹூதியும் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜைகளும், தொடா்ந்து சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க காலை 9 மணிக்கு யாக சாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு மூலவா் சந்நிதிகள், விமானங்களை அடைந்தன.
இதையடுத்து காலை 9.35 மணிக்கு பசும்பொன் மைலாம்பிகை அம்பாள், தாருகாவனேசுவரா், விநாயகா், சுப்பிரமணியா் உள்ளிட்ட விமான கலசங்களுக்கு சிவாச்சாரியா்கள் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனா்.
பின்னா், 10 மணிக்கு பரிவார மூா்த்திகள் உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
மாலையில் சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவமும், பஞ்ச மூா்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.