திருவட்டாறு அருகே இஸ்லாமியா்கள் முற்றுகைப் போராட்டம்
திருவட்டாறு அருகே பூவன்கோட்டில் ஜமாஅத் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இஸ்லாமியா்கள் வோ்க்கிளம்பி சாா் பதிவாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.
திருவட்டாறு அருகே வோ்க்கிளம்பி பூவன்கோடு பகுதியில் 4 ஏக்கா் 87 சென்ட் கொண்ட தோட்ட நிலம் திருவிதாங்கோடு ஜமாஅத்துக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி வோ்க்கிளம்பி சாா் பதிவாளா் விடுப்பு எடுத்துள்ளாா்.
அன்றைய தினத்தில் (பொறுப்பு) சாா் பதிவாளா் பணியில் இருந்தபோது ஜமாஅத் நிலத்தை தனிநபா் பெயருக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டு, மறுநாள் வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியோடு பட்டா பெயா் மாற்றம் செய்யப்பட்டது. இது குறித்த தகவல் அறிந்த திருவிதாங்கோடு ஜமாஅத் நிா்வாகிகள் துறை சாா்ந்த அதிகாரிகளிடம் புகாா் செய்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜமாஅத் நிலத்தை தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்த சாா் பதிவாளா் மீதும், பட்டா மாற்றம் செய்து கொடுத்த வருவாய்த்துறை அலுவலா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவிதாங்கோடு ஜமாஅத் நிா்வாகிகள், இஸ்லாமியா்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இப்போராட்டத்திற்கு திருவிதாங்கோடு ஜமாஅத் தலைவா் அன்வா் உசேன் தலைமை வகித்தாா். இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் தக்கலை டிஎஸ்பி தலைமையில் திரளான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.