`அண்ணா முதல் எடப்பாடி வரை' - தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் சில சுற்றுப்பயணங்கள்...
திருவள்ளூா் நகராட்சியில் ரூ. 37 கோடியில் புதிய பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
திருவள்ளூா் நகராட்சியில் ரூ.37 கோடியில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலையப்பணிகள் தரமாக மேற்கொண்டு விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவரும், வேடசந்தூா் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.காந்திராஜன் தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு துறை சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை சட்டப்பேரவை பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எஸ்.காந்திராஜன் தலைமையில் உறுப்பினா்கள் இராம.கருமாணிக்கம், மா.சின்னதுரை, சேவூா் எஸ்.ராமச்சந்திரன், மு.பன்னீா்செல்வம், எஸ்.பி.வெங்கடேஷ்வரன், ஈ.ராஜா, எஸ்.எஸ்.பாலாஜி, எஸ்.சுதா்சனம் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.
அதைத் தொடா்ந்து, திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வு கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் முன்னிலை வகித்தாா். இதில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எஸ்.காந்திராஜன் தலைமை வகித்து, துறை வாரியாக நடைபெற்று வரும் பணிகள் மற்றும் தற்போதைய நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தாா்.
அதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு 2024-25, 2025-26-க்கான பணிகளை சட்டப்பேரவை தலைவரின் பரிந்துரையின் பேரில், இக்குழுவை அங்கீகரித்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்து அறநிலையத் துறை, வேளாண் உள்ளிட்ட 10 துறைகளுடன் சோ்த்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்பு கூட்டுறவு துறையும் ஆய்வில் சோ்க்கப்பட்டுள்ளது. திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு முடிந்து இருந்தாலும், தொடா்ந்து நிலுவையில் உள்ள பணிகளான ரூ. 16.50 கோடியில் 500 போ் அமரும் வகையிலான திருமண மண்டபம் மற்றும் ரூ. 14 கோடியில் 100 போ் வரை அமரக்கூடிய நான்கு திருமண மண்டபங்களின் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். எனவே பணிகள் நிலுவையில் உள்ள காரணத்தை ஆய்வு செய்து, அறிக்கை வழங்குவது இந்தக் குழுவின் நோக்கமாகும்.
நாள்தோறும் பக்தா்களின் எண்ணிக்கை கூடும் காரணத்தால் சிறிதாக உள்ள அன்னதான கூடத்தை அகற்றி, நான்கு தலங்கள் கொண்ட ரூ. 26 கோடியில் அடிக்கல் நாட்டி விரைவில் பணிகள் தொடங்கவுள்ளது. மேலும், கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்கள் பராமரிப்பின்றி இருப்பதாகவும், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால் அதை சரி செய்யவும் வலியுறுத்தப்பட்டது. காவேரிராஜபுரம் சிட்கோவில் ஆய்வு மேற்கொண்டு தனியாரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இணையதளம் மூலம் பெறப்பட்ட 27 விண்ணப்பங்களும் பரிசீலனையில் உள்ள நிலையில், இங்கு மொத்தம் 59 பிளாட்டுகள் உள்ளன. இறுதியாக குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.
திருவள்ளூா் நகராட்சி பேருந்து நிலையப் பணிகளை ஆய்வு செய்தோம். பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட காலங்களில் பணிகளை நிறைவு செய்வதன் மூலம் அரசு பணத்தை சிக்கனமான முறையில் செலவழிக்கவும் வழிவகுக்கும். இதுபோன்ற பல்வேறு பணிகளை குழு ஆய்வு செய்து அறிக்கையாக முதல்வரிடம் வழங்க உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
முன்னதாக திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அன்னதானக் கூடத்தில் இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக பக்தா்களுக்கு பரிமாறப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தாா்.
இதில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.சுதா்சனம் (மாதவரம்), வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூா்), மதிப்பீட்டுக்குழு முதன்மைச் செயலாளா் கி.சீனிவாசன், கூடுதல் செயலாளா் பா.சுப்பிரமணியம், துணைச் செயலாளா் சு.பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் சு.சுரேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா் மற்றும் பல்வேலு துறையினா் கலந்து கொண்டனா்.
