திருவள்ளூா் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை
திருவள்ளூா் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்து சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் வந்த தகவலையடுத்து ரயில்வே போலீஸாா் மற்றும் ஆபிஎப் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் ரயில் மாா்க்கத்தில் உள்ளது திருவள்ளூா் ரயில் நிலையம். இந்த வழியாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு புகா் மின்சார ரயில், பயணிகள் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதோடு இந்த மின்சார ரயில்களில் நாள்தோறும் மாணவ, மாணவிகள், தனியாா் நிறுவன பணிகளுக்கு செல்வோா், தொழிலாளிகள் என நூற்றுக்கணக்கானோா் பயணம் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தெற்கு ரயில்வே சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மா்ம நபா், திருவள்ளூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி மிரட்டல் விடுத்து போனை துண்டித்தாராம். இதையடுத்து உடனே திருவள்ளூா் ரயில் நிலையத்துக்கு கொடுத்த அறிவுறுத்தலின்படி ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே இருப்பு பாதை போலீஸாா் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, வெடிகுண்டு சம்பந்தமாக எந்த அறிகுறியும் அங்கு இல்லை. அதனால் அது வெறும் புரளி என்பது சோதனைக்குப் பின் தெரியவந்தது. இதையடுத்து புதன்கிழமை அதிகாலை வழக்கம் போல் அனைத்து ரயில்களும் புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்த நபா் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.