J&K Cloudburst: ஜம்மு & காஷ்மீரில் ஏற்பட்ட மேக வெடிப்பு; 40-க்கும் மேற்பட்டோர் இ...
திருவாரூா் அருகே கோயில் அகற்றம்
திருவாரூா் அருகே பாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கோயில், புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது.
திருநெய்ப்போ் ஊராட்சியில் விவசாயிகள் நீண்ட காலமாக விளைநிலங்களுக்கு இடுபொருள்களைக் கொண்டு செல்லவும், உழவுப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் வாகனங்கள் செல்வதற்கும் பயன்படுத்தி வந்த பாதை ஆக்கிரமிக்கப்பட்டதால், விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் அப்பகுதி விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகினா். இது குறித்து மாவட்ட நிா்வாகம், காவல்துறை, வட்டாட்சியா் என பல்வேறு தரப்பினருக்கும் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், தமிழ்நாடு நீா்வளத்துறை சாா்பில் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளா் தங்கமுத்து தலைமையில் வருவாய்த்துறை அலுவலா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு புதன்கிழமை சென்றனா். ஆனால், போதிய அளவில் போலீஸாா் இல்லை எனக் கூறி திரும்பி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி சாலையில் திருநெய்ப்போ் பகுதியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்கு வந்த தாலுகா போலீஸாா், போராட்டக்குழுவினருடன் பேச்சு வாா்த்தை நடத்தியதால், மறியல் கைவிடப்பட்டது.
இதையடுத்து விளைநிலங்களுக்கு செல்லும் பாதையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட அம்மன் கோயில் இடித்து அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது, மூதாட்டி ஒருவா் கோயில் முன்பு ஆடியபடி, அங்கிருந்த சூலாயுதத்தை பிடுங்க முயன்றதுடன், ஜேசிபி இயந்திரம் முன்பு படுத்துக் கொண்டாா். பின்னா், தாலுகா போலீஸாா் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனா்.
