தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவராகப் பதவியேற்றார் உமேஷ் குமார்!
அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி உமேஷ் குமார் தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராகப் பதவியேற்றார்.
தில்லி மின்சாரத்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட் தில்லி செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் உமேஷ் குமாருக்குப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.
பதவியேற்பு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆஷிஷ் சூட்,
உமேஷ் குமார் தில்லி மக்களுக்கு நல்ல பணிகளைச் செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம்.
உச்சநீதிமன்றத்தால் தற்காலிக தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயந்த் நாத்துக்குப் பதிலாக ஓய்வுபெற்ற அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி உமேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் தில்லியின் பாஜக தலைமையிலான புதிய அரசு அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜெயந்த் நாத் பதவி விலகினார்.
முன்னதாக அந்தப் பதவிக்குப் பொருத்தமான வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக அப்போதைய ஆம் ஆத்மி அரசுக்கும் துணைநிலை ஆளுநர் அலுவலகத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு மத்தியில் ஜெயந்த் நாத் 2023 இல் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.
தேசிய தலைநகருக்கான மின்சார ஒழுங்குமுறை அமைப்பாக DERC செயல்படுகிறது, தில்லியில் இயங்கும் மின்சார விநியோகம் மற்றும் உற்பத்தி நிறுவனங்களுக்கான மின்சார கட்டணங்கள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை மேற்பார்வையிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.