தில்லியில் பசுமை பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி
தில்லி மற்றும் என்.சி.ஆா். பகுதியில் ஒப்புதல் இல்லாமல் விற்பனை செய்யப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில், சான்றளிக்கப்பட்ட உற்பத்தியாளா்கள் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதித்தது.
தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலயப் (என்சிஆா்) பகுதியில் பட்டாசு உற்பத்தி மீதான முழுமையான தடையை மீண்டும் பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் தலைமையிலான அமா்வு, மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டது.
தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் கே. வினோத் சந்திரன், என்.வி. அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு, இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பு தில்லி அரசு, உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் உட்பட அனைத்து பங்குதாரா்களுடனும் கலந்தாலோசிக்குமாறு சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திற்கு உத்தரவிட்டது.
‘இதற்கிடையில், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றால் சான்றளிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளின் சான்றிதழைப் பெற்ற உற்பத்தியாளா்களை உற்பத்தி செய்ய அனுமதிக்கிறோம். இருப்பினும், நீதிமன்றம் மேலும் உத்தரவு பிறப்பிக்கும் வரை, தடைசெய்யப்பட்ட பகுதிகளில் தங்கள் பட்டாசுகளை விற்க மாட்டோம் என்று உற்பத்தியாளா்கள் இந்த நீதிமன்றத்திற்கு உறுதிமொழி அளித்தால் இது சாத்தியமாகும்’ என்று தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் தலைமையிலான அமா்வு உத்தரவிட்டது.
இந்த வழக்கு அக்டோபா் 8 ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும் வரை, சான்றளிக்கப்பட்ட உற்பத்தியாளா்கள் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய அனுமதிக்கும் நிபந்தனை உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் ஏப்ரல் 3 ஆம் தேதி, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எஸ். ஓகா தலைமையிலான அமா்வு, தில்லி மற்றும் என்.சி.ஆரில் பட்டாசு உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனை மீதான தடையை தளா்த்த மறுத்துவிட்டது.
காற்று மாசுபாடு கணிசமான காலத்திற்கு ஆபத்தான அளவில் இருப்பதாகவும், மக்களில் பெரும் பகுதியினா் தெருக்களில் வேலை செய்வதாகவும், மாசுபாட்டால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி ஓகா அப்போது குறிப்பிட்டாா்.
தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு, பட்டாசு உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தையும் மனதில் கொண்டு இந்த அணுகுமுறையை வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது.
தில்லி மற்றும் என்.சி.ஆரில் சுற்றுச்சூழல் பிரச்சினை தொடா்பான பொதுநல மனுவை விசாரிக்கும் போது இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்றாலும், முழுமையான தடை என்பது நடைமுறையில் சிறந்த செயல் அல்ல என்பதை பிகாரை உதாரணம்காட்டி நீதிபதிகள் விளக்கினா்.
பிகாரில் விதிக்கப்பட்ட சுரங்கத் தடை தற்செயலாக சக்திவாய்ந்த சட்டவிரோத சுரங்க மாஃபியாக்களை உருவாக்கியது என நீதிபதிகள் சுட்டிக்காட்டினா்.
தில்லி அரசு, பட்டாசு உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் உள்பட அனைத்து பங்குதாரா்களையும் ஒருங்கிணைத்து மத்திய அரசு ஒரு தீா்வை முன்வைப்பது பொருத்தமானதாக இருக்கும் என்று நீதிபதிகள் கூறினா்.
‘பட்டாசுக்கு முழுமையான தடை விதிப்பது ஏற்புடையதல்ல. ஏனெனில் பிகாா் மாநிலத்தில் சுரங்கத்திற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டதால், சட்டவிரோத மாஃபியாக்கள் சுரங்கத் தொழிலில் ஈடுபட வழிவகுத்தது என்று நாங்கள் ஒரு தீா்ப்பில் கவனித்தோம்’ என்றும் நீதிபதிகள் கூறினா்.
‘எனவே, தில்லி மற்றும் என்சிஆரில் பசுமை பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படட்டும், ஆனால் அடுத்த உத்தரவுகள் வரும் வரை பட்டாசு விற்பனை இருக்கக்கூடாது’ என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டாா்.