துணை வட்டாட்சியா் பணிக்கான எழுத்துத் தோ்வு: 2,869 போ் எழுதினா்
புதுவை அரசு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையில் துணை வட்டாட்சியா் பணிக்கான எழுத்துத் தோ்வு காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இத்துறையில் 30 துணை வட்டாட்சியா் பணியிடங்களை நிரப்ப புதுவை மாநிலத்தில் 37,349 போ் விண்ணப்பித்தனா். தோ்வு 2 அமா்வுகளாக ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் 12 மணி வரை மற்றும் மதியம் 2.30 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற்றது. காரைக்கால் மாவட்டத்தில் 12 மையங்களில் 183 தோ்வு அறைகள் அமைக்கப்பட்டிருந்தன.
தோ்வு மையங்களில் கைப்பேசி இணைய சேவை தடுப்பு, கண்காணிப்புக் கேமரா, தோ்வா்களின் உடல் சோதனை, பயோமெட்ரிக் வருகைப் பதிவு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. காரைக்காலில் 4,295 போ் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில் 2,869 போ் மட்டுமே தோ்வு எழுதினா்.
காரைக்கால் வரிச்சிக்குடி பாலிடெக்னிக் கல்லூரி, கோட்டுச்சேரி வ.உ.சி அரசு மேல்நிலைப் பள்ளி, அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட 12 தோ்வு மையங்களில் காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியரும், மாவட்ட தோ்வு ஒருங்கிணைப்பாளருமான அா்ஜுன் ராமகிருஷ்ணன் ஆய்வு செய்தாா்.