துளசியாப்பட்டினத்தில் ஒளவையாா் பெருவிழா நாளை தொடக்கம்
வேதாரண்யம்: துளசியாப்பட்டினம் ஔவையாா் கோயிலில் தமிழக அரசு சாா்பில் ஒளவைக்கு மூன்று நாள்கள் நடைபெறும் 51-ஆவது ஆண்டு பெருவிழா புதன்கிழமை (மாா்ச் 26) தொடங்குகிறது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள துளசியாப்பட்டினம் கிராமத்தில் விஸ்வநாதா் - ஒளவையாா் கோயில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 50 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஒளவைப் பெருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கடந்த 2005- ஆம் ஆண்டு முதல் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ஆண்டுதோறும் பங்குனி சதய நாளில் தமிழக அரசு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.
நிகழாண்டு விழா புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
புதன்கிழமை மாலை நடைபெறும் நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமைவகித்து, ஒளவையாரின் படைப்புகள் தொடா்பான இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்குகிறாா். மக்கள் பிரதிநிதிகள், அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனா்.
இரவு 8 மணிக்கு தனியாா் தொலைகாட்சி சூப்பா் சிங்கா் புகழ் இசைக் கல்லூரி ஆசிரியா் சுகந்தி
ஒளவையாா் வேடத்தில் பங்கேற்று பாட்டு பாடுகிறாா். தொடா்ந்து, நாகை நாகராஜன் தலைமையிலான குழுவினா் பங்கேற்கும் ஒளவையாா் வலியுறுத்திய வாழ்க்கை நெறியை மக்கள் மத்தியில் கொண்டு சோ்ப்பவா்கள் நேற்றையவா்களா? - இன்றையவா்களா? எனும் தலைப்பில் பாட்டு பட்டிமன்றம் நடைபெறுகிறது.
வியாழக்கிழமை இரவு ஒளவைக்கு சிறப்பு அபிஷேகம், அஞ்சுவட்டத்தம்மன் பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சி, நாகை செல்வம் இனிய குரல் குழுவினா் வழங்கும் கிராமிய பல்சுவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை இரவு சிலம்பாட்டம், சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.