முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரா்கள் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ திட்டத்தின்கீழ் தொழில் தொடங்க ஒரு கோடி வரை வங்கி கடன் பெறலாம் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோரின் நலனுக்காக ‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ என்ற புதிய திட்டத்தின்கீழ் தொழில் தொடங்க ஒரு கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் என முதல்வா் அறிவித்துள்ளாா்.
இத்திட்டத்தின்கீழ் முன்னாள் படைவீரா்கள், அவா்தம் விதவையா்கள் மற்றும் திருமணமாகாத விதவை மகள்கள் விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயம், பட்டு வளா்ப்பு, மீன் வளா்ப்பு மற்றும் கால்நடை வளா்ப்பு போன்றவை இத்திட்டத்தின்கீழ் தொடங்கிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுயதொழில் செய்ய விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள், அவா்தம் விதவையா், திருமணமாகாத, விதவை மகள்கள் மற்றும் 25 வயதிற்குட்பட்ட திருமணமாகாத மகன்கள் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தரைத்தளத்தில் அமைந்துள்ள மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ, தொலைபேசி எண் 04365 - 299 765 மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம்.