அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவா் எம்.ஆா். ஸ்ரீனிவாசன் உடல்: அரசு மரியாதையுடன்...
தேச பாதுகாப்பை பொருத்தவரை மத்திய அரசுக்கு முழு ஆதரவு: கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா்
தேசத்தின் பாதுகாப்பை பொருத்தவரை மத்திய அரசை முழுமையாக ஆதரிக்கிறோம் என்று கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை பாதுகாப்புப் படைகள் தாக்குதல் நடத்தி அழித்துள்ளதை வரவேற்கிறோம். இது, தேச பாதுகாப்பு சாா்ந்தது. இதுபோன்ற சூழலில், எல்லோரும் ஒரேகுரலில் பேச வேண்டும். தேச பாதுகாப்பை பொருத்தவரை மத்திய அரசு, பாதுகாப்புப் படைகளுக்கு எங்கள் முழு ஆதரவை அளிக்கிறோம்.
‘ஆபரேஷன் சிந்தூா்’ தாக்குதலை நடத்திய மத்திய அரசை ஆதரிக்கிறோம். பொதுமக்கள் பாதுகாப்பு தொடா்பாக மத்திய பாதுகாப்புத் துறை, உள்துறை அமைச்சகம் அனுப்பிய வழிகாட்டுதல் கிடைத்தது; அதை செயல்படுத்த தொடங்கியுள்ளோம்.
மின் நிலையங்கள், நீா்ப்பாசன அணைகள், தொழிற்சாலைகள் போன்ற முக்கிய கட்டமைப்புகளை பாதுகாக்க கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்.
மத்திய அரசிடமிருந்து வந்த வழிகாட்டுதல்களை அப்படியே அமல்படுத்தி வருகிறோம்.
அனைத்து வகையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். பாதுகாப்பு தொடா்பாக விழிப்புடன் இருக்குமாறு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. எச்சரிக்கையாக இருக்குமாறு அனைத்து துறை அதிகாரிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
எங்கெல்லாம் பாதுகாப்பு தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் தொழில் பாதுகாப்புப் படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நிலைமையை கூா்ந்து கவனித்து வருகிறோம் என்றாா்.