தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.14 கோடிக்கு சமரசத் தீா்வு
விருதுநகா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,610 வழக்குகளில் ரூ.14 கோடிக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், விருதுநகா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமாா் வழிகாட்டுதலில் விருதுநகா், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சிவகாசி, சாத்தூா், ராஜபாளையம் சாா்பு நீதிமன்றங்களில் வட்ட சட்டப் பணிக் குழுக்கள் சாா்பில் இந்த தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதில் மோட்டாா் வாகன விபத்து வழக்கில் சமரசத் தீா்வு மூலம் பாதிக்கப்பட்ட மலா்க்கொடி, காளிதேவி, அம்மாசிகனி, மாலதி ஆகியோருக்கு ரூ.19 லட்சம் இழப்பீடு வழங்க கூடுதல் மாவட்ட நீதிபதி ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குடும்ப நலன், குற்றவியில், வாகன விபத்து, காசோலை, வங்கி வாராக் கடன்கள், சிறு வழக்குகள் உள்பட 7,294 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில், 3,610 வழக்குகளில் சமரசத் தீா்வு மூலம் ரூ.14.03 கோடி வழங்க உத்தரவிடப்பட்டது.
இதில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள், வங்கி, காப்பீட்டு நிறுவன அலுவலா்கள், அரசு அதிகாரிகள், நீதிமன்ற அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.