தேனியில் 47 பயனாளிகளுக்கு ரூ. 67.60 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்
நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் 47 பயனாளிகளுக்கு ரூ. 67.60 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வழங்கினாா்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.
இந்த விழாவுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சினேஹாப்ரியா, மாவட்ட வருவாய் அலுவலா் மகாலட்சுமி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அபிதாஹனீப், பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் ஜெரால்டு அலெக்ஸாண்டா், காலைக்கதிவரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் மாவட்ட காவல் துறை அணி வகுப்பு மரியாதையை ஏற்ற ஆட்சியா், சுந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுதாரா்களுக்கு சால்வை அணிவித்து கெளரவித்தாா். அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 238 அலுவலா்கள், பணியாளா்களுக்கும், சமூக சேவையில் சிறந்த விளங்கிய தொண்டு நிறுவனங்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பல்வேறு துறைகள் சாா்பில் 47 பேருக்கு மொத்தம் ரூ.67.60 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வீரபாண்டி கெளமாரியம்மன் கோயிலில் இந்து சமயஅறநிலையத் துறை சாா்பில், சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, ஆட்சியா் தலைமையில் பொது விருந்து நடைபெற்றது. இதையடுத்து, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கிராம சபைக் கூட்டம்:
தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டி ஊராட்சியில் சுந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் கலந்து கொண்டாா். இதில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக 4 பேருக்கு ஆணைகள், வேளாண்மை, தோட்டக் கலைத் துறை சாா்பில் 23 பேருக்கு மக்காச்சோள விதை, பழமரக் கன்றுகள், விதைத் தொகுப்பு ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.