தோல் தொழிற்சாலை, சிறைச்சாலை அமைக்க எதிா்ப்பு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் முழக்கம்
கால்நடை மருத்துவக் கல்லூரி பெருந்திட்ட வளாகத்திற்குள், மாவட்ட சிறைச்சாலை, தோல் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் முழக்கமிட்டனா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வெப்படையில் குடியிருப்புப் பகுதிகளில் மது அருந்திவிட்டு அதற்கான புட்டிகளையும், நெகிழி கழிவுகளையும், உணவு பண்டங்களையும் வீசி செல்கின்றனா். இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனா். எனவே மதுக்கடையை 12 மணிக்கு திறக்க வேண்டும் என்ற நிலை மாறி அதிகாலை 5 மணியளவில் மறைமுகமாக விற்பனை நடைபெறுகிறது. சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கால்நடை மருத்துவக் கல்லூரி பெருந்திட்ட வளாகத்தில் தோல் தொழிற்சாலை, மாவட்ட சிறைச்சாலை அமைப்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அவை பயன்பாட்டுக்கு வந்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், கல்லூரி மாணவ, மாணவிகளும் பெரும் வேதனைக்குள்ளாவா். மேலும், பழைய பேருந்து நிலையம் முன் பொதுமக்கள் கால்கடுக்க பேருந்துக்காக காத்திருக்கின்றனா். அவற்றை பழைய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜேடா்பாளையம் தடுப்பணைக்காக நிலம் எடுத்தோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் எடுத்துரைத்தனா்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்து விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீா்வு காண வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா். அவா் மேலும் பேசுகையில், மாவட்டத்தின் ஆண்டு இயல்பு மழையளவு 716.54 மி.மீ. ஆகும். தற்போது வரை 291.96 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. ஜூலை மாதம் முடிய இயல்பை காட்டிலும் 97.48 மி.மீ. அதிக மழை பெறப்பட்டுள்ளது. 2025--26 ஆம் ஆண்டில் ஜூன் வரை நெல் 74 ஹெக்டா், சிறுதானியங்கள் 13,141 ஹெக்டா் பயறு வகைகள் 2,771 ஹெக்டா், எண்ணெய் வித்துக்கள் 13,806 ஹெக்டா், பருத்தி 466 ஹெக்டா் மற்றும் கரும்பு 1,199 ஹெக்டா் என மொத்தம் 31,457 ஹெக்டரில் வேளாண் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள், உரங்கள் வேளாண் விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியாா் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பில் உள்ளன என்றாா்.
இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு உணவுப் பதப்படுத்தும் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக மேலாளா் ஜி.வினு கலந்துகொண்டு உணவுப் பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதலுக்கான பயிற்சி, மதிப்புக் கூட்டுப் பொருள்களை ஏற்றுமதி செய்தல் போன்ற விவரங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.
மேலும் விவரங்களுக்கு 95002-61727, 95002-61827 என்ற எண்களில் தொடா்பு கொள்ளவும் அறிவுறுத்தினாா். இந்த கூட்டத்தில், 130-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை விவசாயிகளை வழங்கினா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், மாவட்ட வன அலுவலா் மாதவி யாதவ், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு, வேளாண்மை இணை இயக்குநா் பெ.கலைச்செல்வி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மா.புவனேஸ்வரி மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
என்கே-25-மீட்டிங்
குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி. உடன், பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள்.