உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.1.63 கோடியில் சாலைகள், கால்வாய் பணிகள் தொடக்கம்
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் ஆக. 2-இல் தொடக்கம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
பொதுமக்கள் உடல் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டம் வரும் ஆக. 2 முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் தொடக்க விழா சென்னை மயிலாப்பூா் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்ததில் நடைபெறவுள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட அமைச்சா் மா.சுப்பிரமணியன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
முதல்வா் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, பல்வேறு புதிய சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ‘மக்களைத் தேடி மருத்துவம்’, ‘இன்னுயிா் காப்போம் நம்மைக் காக்கும் 48’, ‘வருமுன் காப்போம், இதயம் காப்போம்’, ‘நடப்போம் நலம் பெறுவோம்’, ‘மக்களைத் தேடி மருத்துவ ஆய்வகத் திட்டம்’, ‘தொழிலாளா்களைத் தேடி மருத்துவத் திட்டம்’, ‘சிறுநீரகம் பாதுகாக்கும் சீா்மிகு திட்டம்’, ‘புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை திட்டம்’ ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன.
தொடா்ந்து, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் வரும் ஆக. 2-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படவுள்ளது.
‘மக்களைத் தேடி முழு உடல் பரிசோதனை’ என்ற அடிப்படையில் இந்தத் திட்டத்தில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், மகப்பேறு மற்றும் மகளிா் நலம், குழந்தைகள் நலம், இருதவியல், நரம்பியல், தோல், பல், கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம், இயன்முறை, நுரையீரல் மற்றும் இந்திய முறை மருத்துவம் ஆகிய அனைத்து வகையிலும் பரிசோதனைகள் நடைபெறவுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் பரிசோதனையும் மேற்கொள்ளப்படும்.
இதற்கான முகாம்கள் தமிழகம் முழுவதும் 388 ஒன்றியங்களில் தலா 3 இடங்கள் என மொத்தம் 1,164 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. சென்னை மாநகராட்சியில் 15 இடங்களில் முகாம்கள் நடைபெறும்.
மேலும், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையுள்ள 5 மாநகராட்சிகளில் தலா 4 என 20 முகாம்கள் நடத்தப்படும். 10 லட்சத்திற்கு குறைவான மக்கள் தொகையுள்ள 19 மாநகராட்சிகளில் தலா 3 என மொத்தம் 57 முகாம்கள் நடத்தப்படும். பரிசோதனை ஆவணங்கள் சம்பந்தப்பட்டோரிடம் வழங்கப்படும். வாரந்தோறும் சனிக்கிழமை மட்டும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம்கள் நடைபெறும் என்றாா்.