நல்லாத்தூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்: விவசாயிகள் திறப்பு
திருக்கழுகுன்றம் ஒன்றியம், நல்லாத்தூா் ஊராட்சி பொம்மராஜபுரம் கிராமத்தில் 5-ஆம் ஆண்டாக நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக நல்லாத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் பிரமிளா சிவா கலந்து கொண்டு விவசாயிகளின் கரங்களால் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து பயன்பாட்டுக்கு ஒப்படைத்தாா்.
நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் நல்லாத்தூா் பொம்ம ராஜபுரம் ,கொந்தகாரி குப்பம், பனங்காட்டு சேரி, ஆயப்பாக்கம் ,விட்டிலாபுரம், வாயலூா், பேரம்பாக்கம் ,லட்டுா் உள்ளிட்ட 15 கிராம நெல் விவசாயிகள் பயனடைவாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் வெங்கட் மணி, முன்னாள் துணைத்தலைவா் கன்னியம்மாள், லோகநாதன் வாா்டு உறுப்பினா்கள் கேசவன் , எல்லம்மாள் நாராயணன், சமூக ஆா்வலா் என். சிவா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.