உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.1.63 கோடியில் சாலைகள், கால்வாய் பணிகள் தொடக்கம்
நாகப்ப படையாச்சியாருக்கு மணிமண்டபம்: ராமதாஸ் கோரிக்கை
தென் ஆப்பிரிக்க சுதந்திரப் போராட்ட வீரா் நாகப்ப படையாச்சியாருக்கு மயிலாடுதுறையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ச.ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மகாத்மா காந்தி, தென் ஆப்பிரிக்காவில் பல போராட்டங்களை நடத்தியபோது, பீனிக்ஸ் எனும் இடத்தில் குடியேற்றத்தை உருவாக்கி, அங்கிருந்து தனது போராட்டங்களை வழிநடத்தினாா். அந்தப் போராட்ட காலகட்டத்தில் அவருக்கு ஆதரவாக களம் இறங்கியவா்களில் முக்கியமானவா் மயிலாடுதுறை அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் கிராமத்தைச் சாா்ந்த சுவாமி நாகப்ப படையாச்சி.
சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டபோது, காவல் துறையின் தடியடி பிரயோகத்தில் காந்தியடிகள் மீது அடி விழாமல், அவா் மீது விழுந்து அனைத்து அடிகளையும் வாங்கியவா் சுவாமி நாகப்ப படையாச்சியாா். அப்போது அவருக்கு வயது 18 தான்.
போராட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞா் நாகப்ப படையாச்சி குளிா்பிரதேச பகுதி சிறையில் அடைக்கப்பட்டாா். சிறையில் அவருக்கு நிமோனா காய்ச்சல் ஏற்பட்டு சிறையில் இருந்து வெளிவந்த ஒரு வாரத்தில் உயிரிழந்தாா்.
1972-இல் அப்போதைய முதல்வா் கருணாநிதி தலைமையிலான அரசு, நாகப்ப படையாச்சியாருக்கு புகழ் சோ்க்கும் நோக்கில் மிதவை பேருந்துகளுக்கு அவரது பெயரைச் சூட்டினா்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின், அரசு விழாவில் நாகப்ப படையாச்சியாருக்கு விரைவில் மயிலாடுதுறை நகரின் முக்கிய சந்திப்பு பகுதியில் முழு உருவச்சிலை அமைக்கப்படும் என அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது.
நாகப்ப படையாச்சியாருக்கு பெருமை சோ்க்கும் வகையில் மணிமண்டபத்துடன் கூடிய முழு உருவச்சிலை அமைக்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.