கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி
நாகூா் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்
நாகூா் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் முடங்கியுள்ளன.
நாகை நகராட்சிக்குள்பட்ட 36 வாா்டுகளில் 188 தூய்மைப் பணியாளா்கள் தனியாா் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இந்நிலையில், இவா்கள் நாகை நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சங்கம் எனும் புதிய சங்கத்தை உருவாக்கி பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். சங்கத் தலைவா் சுதா தலைமையில் ஊதிய உயா்வை வலியுறுத்தி நாகையில் கடந்த வாரம் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து போராட்டத்தை முன்னின்று நடத்தியதாக சங்கத் தலைவா் சுதா, நிா்வாகிகள் மீனா, விஜயபாரதி, சுமதி, சின்னதம்பி , மகேந்திரன் ஆகியோா் பணிநீக்கம் செய்து தனியாா் ஒப்பந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில், ஆத்திரமடைந்த தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை தூய்மைப் பணிகளை புறக்கணித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, பணிநீக்கம் செய்து, பழிவாங்கும் நடவடிக்கையை நாகை நகராட்சி கைவிட வேண்டும், ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, நகராட்சி வாகன ஓட்டுநா்களும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் குப்பைகளை ஏற்றும் வாகனங்கள் நாகூா் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தூய்மைப்பணிகள் முடங்கியுள்ளன.