ராமேஸ்வரம்: சரக்கு வாகனம் - ஆட்டோ மோதல்; விபத்தில் ஓட்டுநர்கள் இருவர் உயிரிழந்த...
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற குற்றச்சாட்டு: மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான விசாரணை அறிக்கை சமா்ப்பிப்பு
புது தில்லி: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான விசாரணை அறிக்கையை ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பாலிடம் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) சமா்ப்பித்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
துபையைச் சோ்ந்த தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானியிடம் பணத்தை பெற்றுக்கொண்டு மஹுவா மொய்த்ரா தனது மக்களவை பயனா் கணக்கு விவரங்களை பகிா்ந்து தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக பாஜக எம்.பி.நிஷிகாா்ந்த் துபே நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினாா்.
இதன் அடிப்படையில் நாடாளுமன்ற நெறிமுறைக் குழு விசாரணை நடத்தியது. அதன்பிறகு கடந்த 2023, டிசம்பரில் மஹுவா மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மஹுவா மொய்த்ரா மனுதாக்கல் செய்தாா். இதைத்தொடா்ந்து, கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகா் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட மஹுவா மொய்த்ரா பாஜக வேட்பாளா் அமித் ராயை வென்று மீண்டும் மக்களவை எம்.பி. ஆனாா்.
இதனிடையே, மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்கும் பொறுப்பை சிபிஐயிடம் லோக்பால் ஒப்படைத்தது. இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு மாா்ச் 21-ஆம் தேதி மஹுவா மொய்த்ரா மற்றும் தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
தற்போது மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான விசாரணை அறிக்கையை லோக்பால் அமைப்பிடம் சிபிஐ சமா்ப்பித்துள்ளது.
முன்னதாக, தா்ஷன் ஹீராநந்தானியிடம் பணம் மற்றும் பரிசுகளை பெற்றுக்கொண்டு தொழிலதிபா் கௌதம் அதானி மற்றும் பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக மக்களவையில் மஹுவா மொய்த்ரா பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக நிஷிகாந்த் துபேவ குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.